திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூவரும் சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியுள்ள நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றிருந்த குறித்த சிறுமிகளை அங்கு கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இவ் வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாதென வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பல்கலைக்கழக நுழைவாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள், கடந்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்டம் உரியமுறையில் செயற்பட்டிருந்தால், இன்று இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டியுள்ளனர்

புதியவை

Back to Top